தமி்ழ் வருஷப்பிறப்பு - 14 4 2007 அன்று காலை 10 40 மணிக்கு. ஸர்வஜித் என்னும் பெயர்கொண்ட இந்த வருஷத்தில் பெயருக்கு தகுந்தாற்போல், அனைவருக்கும் அனைத்திலும் வெற்றி கிட்டும்.எல்லாருக்கும் என்னுடைய வருஷப்பிறப்பு நல்வாழ்த்துக்கள். பண்டிகை என்றாலே மயிலாப்பூர் களை கட்டிவிடும் - எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத, எத்தனை முறை எழுதினாலும் சலிக்காத ஒரு இடம் மயிலாப்பூர் தெற்கு மாட வீதி. இன்றும் அப்படித்தான் :- வெ. அக்ரஹாரம் + ராமகிருஷ்ண மடம் சாலை முனையிலிருந்தே தெற்கு மாட வீதி களைகட்டி விட்டது. மல்லிகை, முல்லை, தாமரை, சாமந்தி என குவியல் குவியலாக பூக்களைக் குவித்திருந்தனர்.பழங்களைப் பற்றி எழுதவே தேவையில்லை - வண்டி வண்டியாக பழங்கள். மலை மலையாக தேங்காய்கள் !சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அத்தனை வேப்ப மரங்களையும் "மொட்டை அடித்து" விட்டார்களோ என வியக்கும் வண்ணம் வேப்பம்பூவான வேப்பம்பூ !! மாவிலை கொத்துக்கள். தோரணங்கள். பச்சடிக்கு ஆயிரக்கணக்கான மாங்காய்கள். பூஜைக்கு வேண்டிய கல்பூரம், சாம்பிராணி, ஊதுவத்திகள் என தெருவே ஒரு பக்தி மணத்துடன் வாசம் வீசியது. மக்கள் கூட்டமும் நிறைய. இந...