Skip to main content

Padma Akka - Remembrance


பத்மா அக்கா

நினைவு அஞ்சலி



நம் அப்பா-அம்மா (ஸ்ரீ GR சுப்ரமணிய அய்யர் - ஸ்ரீமதி சம்பூரணம்) அவர்களின் குமாரத்தியாக சௌ பத்மாவதி 04-04-1936 சனிக்கிழமை (ஞாயிறு விடியற்காலம் 02-15 மணிக்கு), யுவ வருஷம் பங்குனி 23-ஆம் தேதியன்று சுக்ல சதுர்த்தசி திதியும், உத்திரம்(1) நக்ஷத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் சேலத்தில் பிறந்தாள்.

சேலத்தில் பல வருஷங்கள் வசித்த பிறகு, நம் அப்பா-அம்மா 1948-வாக்கில் கடலூர் வந்தனர். அங்கு புதுப்பாளையம் St Anne's Girls High School-ல் பத்மா அக்கா படித்தாள். வந்த புதிதில் புதுப்பாளையம் போன்ற இடங்களில் வசித்து வந்த நம் குடும்பம், 1954ம் வருஷம் அப்பா சொந்த வீடு வாங்கியதும், திருப்பாப்புலியூருக்கு 17 பாபுராவ் தெருவிற்கு நம் சொந்த வீட்டிற்கு அக்டோபர் – நவம்பரில் குடியேறினோம். [1993 வரை இந்த வீட்டில் இருந்தோம்]

அவள் SSLC முடித்ததும்,. கொஞ்ச நாட்கள் நம் அம்மாவிற்கு வீட்டு வேலை, சமையல் வேலைகளில் உறுதுணையாக இருந்து வேலைகளை நன்றாக கற்றுக்கொண்டாள். ஈயச் சொம்பில் பத்மா அக்கா பண்ணும் ரஸத்தை டம்ளர் டம்ளராக குடிக்கலாம் – அவ்வளவு ருசியாக இருக்கும்.

1955-ம் வருஷம் மே மாசம் 4-ஆம் தேதி புதன்கிழமை அவளுக்குக் கல்யாணம் ஆயிற்று. அப்போது அவளுக்கு 19 வயசு முடிந்து ஒரு மாசம் ஆகியிருந்தது. பூனாவில் Controller of Defence Accts (CDA)-ல் வேலை பார்த்த ஸ்ரீ K வெங்கடசுப்ரமணியன் நம்முடைய பெரிய அத்திம்பேராக ஆனார். கல்யாணத்தின் போது அத்திம்பேருக்கு வயசு 27. இருவருக்கும் கிட்டத்தட்ட 8 வயசு வித்தியாசம். அத்திம்பேர்தான் நமக்கு பூனா-புகழ் தூத்பேடாவை அறிமுகப்படுத்தினார்.

கல்யாணம் நம் சொந்த வீட்டில் (17 பாபுராவ் தெருவில்) ஜாம்ஜாம் என்று நடந்தது. மாப்பிள்ளை வீட்டார் தங்குவதற்கென பக்கத்திலேயே ஒரு வீட்டை (13 பாபுராவ் தெரு) நம் அப்பா ஏற்பாடு பண்ணியிருந்தார். சமையல், பக்ஷணம் ஆகியவற்றுக்கு நாராயண அய்யர் என்ற சமையற்கார மாமாவை ஏற்பாடு பண்ணியிருந்தார். வீட்டுக்கே வந்து லட்டு முதலானவற்றை இவர் பண்ணினார். கல்யாணத்தின் போது நம் வீட்டில் பல பேருக்கு உடல்நல்ம் சரியாக இல்லை; அப்படியும் கல்யாணத்தை ரசித்து அனுபவித்தோம். வீட்டில் அதற்கப்புறம் நிறைய கல்யாணங்கள் நடந்த போதிலும், இதுதான் நம் வீட்டின் முதல் கல்யாணம் அல்லவா !

கல்யாணம் முடிந்த கையோடு நவம்பர் 1955-ல் பத்மா பூனா சென்றுவிட்டாள்; 11 ராஸ்தாபேத் வாழ்க்கை தொடங்கியது. 1956 ஏப்ரலில் கும்பகோணத்தில் நடந்த நம் பெரிய அண்ணா கல்யாணம் முதல் எல்லா விசேஷங்களுக்கும் பத்மா - அத்திம்பேர் வந்து கலந்து கொண்டார்கள். வீட்டில் நிகழ்ந்த எந்த ஒரு விசேஷத்தையுமே விட்டுக் கொடுக்காமல் இந்தியாவின் எந்த மூலையிலிருந்தாலும் ஓடோடி வந்து விடுவார்கள். இந்த சிறப்பான வழக்கம் இறுதிவரை நீடித்தது.

நவம்பர் 1955 லிருந்து மே 1957 வரை பூனாவில் இருந்த பின்னர் ஜுன் 1961-வரை குன்னூரில் வேலை. குன்னூரில் அக்கா இருந்தபோது நான், சாவித்திரி, சுகவனம், ஜெயராமன் ஆகியோர் அங்கு சென்று அவளுடன் கோடை விடுமுறையை இரண்டு முறை enjoy பண்ணினோம். அக்கா 1961-ல் குன்னூரிலிருந்து மீண்டும் பூனா போனாள்.

1962-ல் நான் எனது M.Sc படிப்பை முடித்ததும் நேராக பூனாதான் சென்றேன். நம் அம்மாவும், 2 வயசு கூட நிரம்பாத வாசுவும் என்னுடன் வந்தார்கள். தன் நண்பர்களிடம் சொல்லி அத்திம்பேர் எனக்கு ERDL-ல் வேலை வாங்கி கொடுத்தார். 1963 ஜனவரி 7ஆம் தேதி நான் Kirkee-யில் வேலையில் சேர்ந்தேன். பத்மா என்னை சிறப்பாக கவனித்துக் கொண்டாள். தினமும் காலை 7-30க்குள் டிஃபன் பண்ணி எனக்கு கொடுத்து, பிறகு லஞ்ச்சை தயார் பண்ணி 11-15க்கு வரும் டப்பாவாலாவிடம் கொடுத்து விடுவாள். இதுபோன்ற ராஜ வாழ்க்கை இரண்டு வருஷங்கள் நீடித்தது 1965-ல் அக்கா-அத்திம்பேர் விசாகப்பட்டினத்திற்கு மாற்றலாகி போகும்வரை. அக்காவையும் அத்திம்பேரையும் நன்றியோடு நமஸ்கரிக்கிறேன். இந்த பூனா வாழ்க்கையை என்னால் மறக்க முடியாது.

1965-லிருந்து 1969 வரை விசாகப்பட்டினத்தில் அக்கா இருந்தபோது, ஜெயராமன் அங்கு சென்று தங்கி மூன்று வருஷம் B.Com. படித்தான். ஜெயராமனாலும் அக்கா - அத்திம்பேரை மறக்க முடியாது. அக்காவின் சீமந்த புத்திரன் பிரகாஷ் 05 அக்டோபர் 1968-ல் திருப்பாப்புலியூரில் நம் வீட்டில் பிறந்தான்.

ஏப்ரல் 1969-ல் அக்கா வைசாக்கிலிருந்து கிளம்பி சென்னை அம்பத்தூருக்கு வந்து ப்ருத்விபாக்கத்தில் வாடகை வீட்டில் இருந்தாள். நாலு வருஷம் அங்கு இருந்த பிறகு 1973-ல் மீண்டும் பூனா வந்தாள். டெக்கன் ஜிம்கானாவில் இருந்தாள். அப்போது எனக்கு கல்யாணமாகி, விஜயாவுடனும், குழந்தை அருணுடனும் நான் பூனாவில் இருந்தேன். எங்கள் வீட்டிற்கு அக்காவும், அவர்கள் டெக்கன் ஜிம்கானா வீட்டிற்கு நாங்களும் போய் வந்து கொண்டிருப்போம்.

ப்ருத்விபாக்கத்தில் இருந்தபோது அக்காவிற்கு 20 மார்ச் 1972 அன்று ஸ்ரீவித்யா பிறந்தாள். இவளும் திருப்பாப்புலியூரில் பிறந்தாள். அப்போதே அம்பத்தூரில் ராம்நகரில் சொந்த வீடு கட்டி குடியேறினார்கள். 1973-ல் குழந்தை ஸ்ரீவித்யாவின் ஆயுஷ்ய ஹோமம் சொந்த வீட்டில் அக்கா கொண்டாடினாள். பிறகு ஜூலை 73-ல் புஜ் சென்றார்கள். ஜூன் 1977-ல் கடைசியாக சென்னை வந்தாள்.

ஒன்பது வருஷங்கள் கழித்து ஜூன் 1986-ல் தனது 58 வயது முடிந்ததும் அத்திம்பேர் ஆஃபிஸராக CDA-விலிருந்து ஓய்வு பெற்றார்.

சி.பிரகாஷின் ஆரம்ப படிப்பு புஜ்ஜிலும், பின்னர் 5 முதல் 12 வகுப்பு வரை KV ஆவடி, சென்னையிலும், மேற்படிப்பு கோயம்புத்தூரிலும் ஆயிற்று. ஸ்ரீவித்யாவின் படிப்பு முழுக்க சென்னையிலேயே ஆனது.

இரண்டு குழந்தைகளையும் சீராட்டி வளர்த்து, சீரிய கல்வி அளித்து நன்மக்களாக வளர்த்த அக்கா, இருவருக்கும் கல்யாணம் பண்ண ஏற்பாடுகளை ஆரம்பித்தாள். முதலில் ஸ்ரீவித்யாவிற்கு 23 அக்டோபர் 1992 வெள்ளிக்கிழமை சென்னையில் ஸ்ரீ பசுபதியுடன் கல்யாணம் நடந்தது. நாலு வருஷம் கழித்து பிரகாஷிற்கு சௌ ராஜேஸ்வரியுடன் சென்னையிலேயே கல்யாணம் ஆயிற்று. இரண்டு கல்யாணங்களையும், முக்கியமாக ஸ்ரீவித்யாவின் கல்யாணத்தை மிகவும் வியக்கத்தக்க முறையில் சின்ன சின்ன விஷயங்களைக் கூட எழுதி வைத்து, சாமான்களை அழகாக பேக் செய்து, மேலே லேபிள் ஒட்டி – எல்லா வேலைகளையும் தானே தனியாக செய்து, அக்காவின் மானேஜ்மெண்ட் பிரமாதம். தற்போது பிரகாஷ்-ராஜேஸ்வரி அம்பத்தூரிலும், ஸ்ரீவித்யா-பசுபதி பெங்களூரிலும் வசிக்கின்றனர்.

ஸ்ரீவித்யாவின் இரண்டு குழந்தைகளும் (1993, 1997) அம்பத்தூரில் தான் பிறந்தார்கள். இரு பிரசவங்களையும் அக்காதான் நல்ல முறையில் பார்த்துக் கொண்டாள். வருஷத்தின் முக்கால்வாசி நாட்களை சென்னையிலும் மீதியை பெங்களூரிலுமாக அக்கா-அத்திம்பேர் கழித்தனர்.

அத்திம்பேரின் சஷ்டிஅப்த பூர்த்தி 1988-ல் அம்பத்தூரில் கோலாகலமாக நடந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால், முஹூர்த்தத்தை மட்டும் அல்லாமல் (அப்போது மிக பிரபலமாக இருந்த) ஸ்ரீ ராமாயணம் டீவி நிகழ்ச்சியையும் பார்க்க எல்லாரும் ஆசைப்பட்டனர்; டீவி பெட்டியையே மொட்டை மாடிக்கு கொண்டுவந்து விட்டோம் !)

அக்கா-அத்திம்பேரின் 50-ஆம் ஆண்டு கல்யாண நாளையும் அம்பத்தூரில் 2005-ல் சிறப்பாக கொண்டாடினோம்.

அத்திம்பேர் இருந்தவரை எங்கள் வீட்டில் நடந்த எல்லா ஸ்ராத்தங்களுக்கும் முன்னதாகவே அத்திம்பேருடன் வந்து அக்கா தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்து கொடுப்பார். கடைசியாக இந்த வருஷம் ஜுலை 11 ஆம் தேதி நடந்த அம்மா திவசத்திற்கு வந்தாள். சரோஜா, மங்களம், விஜயா, சுகவனம், ஜெயராமன் எல்லாரும் அக்காவுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். இதுதான் அவளது கடைசி போட்டோவாக இருக்கும் என அப்போது யார் நினைத்திருப்பார்கள்?

அக்கா எங்கு போனாலும் பளிச்சென்று அழகிய, கலையாத புடைவை அதற்கேற்ற ப்ளவுஸ் அணிந்து கொண்டு அழகாக வருவாள்.

அத்திம்பேர் நாலு வருஷங்களுக்கு முன்னால் 2008 நவம்பரில் தனது 80-ஆம் வயசில் அம்பத்தூரில் காலமானார். சதாபிஷேகம் பண்ணிக் கொள்ள இன்னும் சில மாதங்களே அப்போது பாக்கி இருந்தன.

இந்த நான்கு வருஷங்களும் பிரகாஷ்-ராஜேஸ்வரியின் சீரிய கவனிப்பில் இருந்த பத்மா அக்கா சில மாதங்களாகவே வாய் புண்ணினால் மிகவும் கஷ்டப்பட்டாள். இந்த செப்டம்பர் முதலிலிருந்தே உடல் நலம் குன்றி, நடக்க முடியாமல், சாப்பிட முடியாமல் இருந்தாள். செப்டம்பர் 22, 23, 24 தேதிகளில் நானும், விஜயாவும், சென்னையில் இருந்த நம் எல்லா சகோதர, சகோதரிகளும் குடும்பத்துடன் அம்பத்தூர் சென்று அக்காவை பார்த்து வந்தோம். அக்காவை பார்ப்பது அதுதான் கடைசி முறை என்று ஒருவர் கூட நினைத்தும் பார்க்கவில்லை.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அக்காவை செப்டம்பர் 26 புதன்கிழமையன்று போரூரில் ஸ்ரீராமச்சந்திரா ஹாஸ்பிடலில் முழு உடல் பரிசோதனைக்காக பிரகாஷ் சேர்த்தான். தீவிர சிகிச்சை அறையில் அக்கா இருந்தாள். ராஜேஸ்வரி 24 மணி நேரமும் ஹாஸ்பிடலிலேயே தங்கினாள். பிரகாஷ் மட்டும் இரவில் அம்பத்தூர் வந்து, விடியலில் மீண்டும் ஹாஸ்பிடல் திரும்பி விடுவான்.

பெங்களூரிலிருந்து ஸ்ரீவித்யா வந்து செப் 28 முழுதும் ஹாஸ்பிடலில் இருந்தாள். பத்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதால், அவளை செப் 28-ஆம் தேதியன்று இரண்டாம்_நிலை தீவிர சிகிச்சை அறைக்கு மருத்துவர்கள் மாற்றினார்கள்.

”அடுத்த 4-5 நாட்களில் முழு முன்னேற்றம் வந்துவிடும், அக்காவை வீட்டுக்கு அழைத்துப் போகலாம்” என்ற மருத்துவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் பகவானின் சித்தத்தை மனிதர் யார் அறிவார்?

அடுத்த நாள் செப்டம்பர் 29 ஆம் தேதி, சனிக்கிழமை விடியற்காலம் 5 மணி சுமாருக்கு பத்மாவின் நாடித்துடிப்பும், ரத்த ஓட்டமும் திடீரென குறைய ஆரம்பிக்கவும், மருத்துவர்கள் அக்காவை உடனடியாக பெரிய ஐசியூவிற்கு கூட்டிப்போய் மீண்டும் தீவிர சிகிச்சை ஆரம்பித்தனர். அப்போது ஸ்ரீவித்யா மட்டும் ஹாஸ்பிடலில் இருந்தாள்.

செய்தி கேட்ட பிரகாஷ் – ராஜேஸ்வரி ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர். மருத்துவர்களின் சிகிச்சை எதற்கும் பலன் அளிக்காமல், நம் அக்கா பத்மா காலை 06:05க்கு காலமானார். 06-16க்கு எங்களுக்கு டெலிஃபோன் செய்தி வந்தது. எங்கள் காதுகளையே எங்களால் நம்ப முடியவில்லை.

விம்மலும், கண்ணீரும், தாங்க முடியாத துக்கத்துடனும் நம் எல்லா உறவினர்களுக்கும் சோகச் செய்தியை கூறிவிட்டு, அம்பத்தூர் விரைந்தோம். போன சனிக்கிழமை தான் அக்காவை பார்த்தோம். ஏழு நாட்களுக்குள் இது போன்ற இடியை எதிர்பார்க்கவேயில்லை.

அன்று மாலை 6-15க்கு அக்கா இறுதியாக தன் பூத உடலை நீங்கினாள். மறுநாள் செப் 30ஆம் தேதி காலையில் பிரகாஷும், ராஜேஸ்வரியும் மயிலாப்பூர் வங்கக் கடலில் அஸ்தியை கரைத்தனர்.

இவ்வாறாக, 76 வருஷம் 5 மாஸம் 24 நாட்களுக்கு முன்னர் ஒரு சுக்ல சதுர்த்தசியில் பிறந்த நம் அக்கா பத்மா, இப்போது இன்னொரு சுக்ல சதுர்த்தசியில் உயிர் நீத்தாள்.


ந ஏனம் சிந்தந்தி சஸ்த்ராணி ந ஏனம் தஹதி பாவக:
ந ச ஏனம் க்லேதயந்தி ஆபோ ந சோஷயதி மாருத:
[3:23]

என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில் அருளியபடி, அக்காவின் ஆத்மாவையும், சஸ்திரங்களாலும் (ஆயுதங்களாலும்) வெட்ட முடியாது, எந்த நெருப்பினாலும் தஹிக்க முடியாது, எந்த ஜலத்தினாலும் நனைக்க முடியாது, எந்த காற்றினாலும் உலர்த்தவும் முடியாது. ஆத்மாவிற்கு அழிவே கிடையாது. ஸ்ரீகிருஷ்ண பகவானின் இந்த அருளுரைகளால் தெளிவு பெற்று, பிரகாஷும், ராஜேஸ்வரியும், ஸ்ரீவித்யாவும் கொஞ்சம் மன அமைதி பெற அந்த கீதாசாரியனை வேண்டி, எல்லாருக்கும் அருள் புரிய அவனை வணங்குகிறேன்.

ஓம் நமோ நாராயணாய

-- ** --

பத்மா அக்காவின் 13 ஆம் நாள் சுபஸ்யம், 11-10 2012 அன்று
அம்பத்தூரில் அக்கா – அத்திம்பேரின் வீட்டில்
ராஜப்பாவினால் படிக்கப்பட்டது.


இந்த நினைவு அஞ்சலி எழுத பல விவரங்களை தந்து / சொல்லி எனக்கு உதவிய பிரகாஷ், சுந்தரேசன், சாவித்திரி ஆகியோருக்கும், பிழை திருத்தம் செய்து உதவிய விஜயாவிற்கும் என் நன்றிகள். ராஜப்பா.

ராஜப்பா
11-10-2012
மாலை 6-45

Comments

Srini said…
Really touching information. Can not forget the love and affection shown by Athai and Athimber. I can not forget the words of them who always says about me "My Vasu" and used to ask me to sit on their lap... almost till end..

Vasu
ராஜப்பா சித்தப்பா said…
“1962-ல் நான் எனது M.Sc படிப்பை முடித்ததும் நேராக பூனாதான் சென்றேன். நம் அம்மாவும், 2 வயசு கூட நிரம்பாத வாசுவும் என்னுடன் வந்தார்கள்.” ......

உனக்கு இப்போது ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ. பத்மா அத்தையின் கீழ் வீட்டில் இருந்த ஸ்ரீ ராகவன் என்பவரின் வீட்டில் தினமும் காலை நீ சென்று, அவரது பூஜையில் பங்கு கொண்டு, கடைசியில் கை நிறைய ப்ரஸாதம் வாங்கிவந்து, உன் குஞ்சுக் கைகளால் பாட்டி முதல் எங்கள் யாவருக்கும் அதை கொடுத்து ... ஓ, அந்த நாட்கள் !! ஒருநாள் நீ வராவிட்டால், அந்த மாமாவும், மாமியும் நம் வீட்டிற்கு ஓடோடி வந்து விடுவார்கள் “எங்கே குழந்தை, எங்கே?” எனக் கேட்டுக் கொண்டு. மறக்க முடியாத நாட்கள்.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை