Skip to main content

மஹாகவி பாரதியார் - Bharatiyar

மஹாகவி பாரதியார்.
A Tribute by Smt NITHYASRI MAHADEVAN

நேற்று (11-12-2008) மஹாகவியின் 126வது பிறந்தநாள். பாரதியாரைப் பற்றி புதிதாக எழுத, சொல்ல என்ன இருக்கிறது ?!

நேற்று செட்டிநாடு வித்யாஷ்ரம் ஸ்கூல் குமார ராஜா முத்தையா செட்டியார் அரங்கில் ஸ்ரீமதி நித்யஸ்ரீ மஹாதேவன் பாரதியார் பாடல்கள் சிலவற்றைப் பாடினார். மஹாகவியின் இனிய பாடல்களை நினைவுகூர ஒரு இனிய் வாய்ப்பாக இது அமைந்தது. (அரங்கைப் பற்றிய விவரம்)
கூட்டத்தை எதிர்பார்த்து, நானும் விஜயாவும் மாலை 5 மணிக்கே அரங்கில் இருந்தோம். 6-30 க்குத்தான் நித்யஸ்ரீ தன்னுடைய இன்னிசையை துவங்கினார்.

"பொழுது புலர்ந்தது; யாம் செய்த தவத்தால்" என்று துவங்கும் பாரதமாதா திருப்பள்ளி யெழுச்சி பாடலுடன் கச்சேரி ஆரம்பமாகியது. "மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ" என பாரதத்தாயை வணங்கி பள்ளியெழுச்சி பாடும் பரவசப் பாடல். அரங்கே அமைதியில்; இன்னிசையில் கட்டுண்டோம்.

அடுத்து வந்தது, "வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்; வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்" என்ற கேட்கக் கேட்கத் திகட்டாத ஸரஸ்வதி தேவியின் புகழ். ஒரு முறை இந்தப் பாட்டை முணுமுணுத்துப் பாருங்கள். என்ன பக்தி, என்ன இனிமை, என்ன சொல்லாடல் ! "மக்கள் பேசும் மழலையிலிருப்பாள்", "ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்", "வீடு தோறும் கலையின் விளக்கம், வீதி தோறும் இரண்டொரு பள்ளி" - ரசித்து அனுபவியுங்கள்.

அடுத்து, "முருகா, முருகா, வருவாய் மயில் மீதினிலே, வடிவேலுடனே வருவாய்" என முருகனை அழைக்கும் பாடல் கணீரென்ற குரலில் ஆரம்பித்தது. நாட்டைக்குறிஞ்சி ராகத்திலே துள்ளாட்டம் போட்டது.

நாலாவதாக, முரசம் கொட்ட முழங்கியது. "வெற்றி யெட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே, வேத மென்றும் வாழ்க வென்று கொட்டு முரசே" - உடம்பே சிலிர்த்துப் போயிற்று. "சாதிக்கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னிற் செழித்திடும் வையம்" என ஜாதியத்தை எதிர்ப்பவனாக, "பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்," என பெண்ணின் பெருமையை பேசுபவனாக பாரதி பலப்பல பரிமாணங்களில் ஒளிர்கின்றான். முழுப் பாடலையும் நேரம் கிடைக்கும்போது மீண்டும் ஒருமுறை அனுபவித்து படியுங்கள்.

திரௌபதியை துச்சாதனன் அவைக்கு இழுத்துவந்து, துகிலுரியத் துவங்குகிறான்; அவள் மானத்தைக் காப்பாற்ற அங்கு யாருமே தயாரில்லை. அன்னை (திரௌபதி) உலகத்தை மறந்தாள்; ஒருமையுற்றாள். எல்லாம் வல்ல கண்ணனை ஓவென்று "ஹரி, ஹரி, ஹரி" என்றாள் - "கண்ணா! அபயம், அபயம், எனக்கு அபயம்" ஓலமிட்டாள்.

"கரியினுக்கு (கஜேந்திரனுக்கு) அருள் புரிந்தே அன்று காப்பாற்றினாய், கண்ணா" என்றும், "சக்கரம் ஏந்தி நின்றாய், கண்ணா! சார்ங்கம் என்றொரு வில்லைக் கரத்துடையாய், அக்ஷரப் பொருளாவாய், கண்ணா! அக்கார அமுதுண்ணும் பசுங் குழந்தாய், துக்கங்கள் அழித்திடுவாய், கண்ணா! தொண்டர் கண்ணீர்களை துடைத்திடுவாய்," என நெக்கு நெக்கேங்கி அழுதாள். "வையகம் காத்திடுவாய் கண்ணா! மணிவண்ணா, என்றன் மனச்சுடரே" என்று மன்றாடினாள்.

நித்யஸ்ரீ "ஹரி, ஹரி, ஹரி," என்று அழைத்தபோது அரங்கிலுள்ளோர் யாவருமே தத்தம் மனசுக்குள்ளாவது "ஹரி"யை அழைத்திருப்பார்கள் (நானும் தான்). அரங்கே ஒரு தவிப்பில் இருந்தது - "கண்ணபிரான் அருளால்- தம்பி கழற்றிட கழற்றிடத் துணி புதிதாய் - வண்ணப் பொற்சேலைகளாம் - அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே" என்று கேட்டதும்தான் நாங்கள் யாவரும் நிம்மதி அடைந்தோம் (கற்பனையல்ல், நிஜமாகவே இதை அனுபவித்தேன்).

"தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்" எங்கள் தாய் குறித்தது அடுத்த பாட்டு. "முப்பது கோடி முகமுடையாள்," "அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்துவள்" எங்கள் பாரதத் தாய்.

எட்டாவதாக, "வந்தேமாதரம் என்போம் - எங்கள் பாரதத் தாயை வணங்குதும் என்போம்" என நித்யஸ்ரீ ஆரம்பித்ததும், அரங்கிலுள்ளோர் பலரும் (என்னையும் சேர்த்து) "ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில், அன்னியர் வந்து புகலென்ன நீதி?", "ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே" எனப் "பாட" ஆரம்பித்தனர்.

அடுத்து, மிகவும் புகழ்பெற்ற " சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா, செல்வக் களஞ்சியமே". யாவரது மனக்கண்களிலும் "பேசும் பொற்சித்திரங்களும்", "பிள்ளைக் கனியமுதுகளும்" தோன்றத் துவங்கின. "உன் கண்ணில் நீர் வழிந்தால் - என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடீ; என் கண்ணில் பாவையன்றோ - கண்ணம்மா! என்னுயிர் நின்னதன்றோ?" என நித்யஸ்ரீ உருகியபோது என் மனம் எங்கோ போய்விட்டது.

பத்தாவதாக, "நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியினில் எறிவதுண்டோ?"

அடுத்து, "திக்குகள் எட்டுஞ் சிதறி - தக்கத் தீம்கிட தீம்தரிகிட" என மழையைக் குறித்த பாட்டு. "வெட்டி யடிக்குது மின்னல், கொட்டி யிடிக்குது மேகம், கூவென்று விண்ணைக் குடையுது காற்று" என்று பாரதி விவரிக்கும்போது சென்னையில் சமீபத்தில் பெய்த மழை நினைவுக்கு வந்தது.

"பாரத ஸமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க பாரத ஸமுதாயம் வாழ்கவே" - இது 12-வது பாடல். "மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வ்ழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை யினியுண்டோ?", "இனியொரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம்; தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!" --- அமரத்துவம் பெற்ற அழியா வரிகள்.

"எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம், எல்லாரும் இந்திய மக்கள்" என்று அறைகூவிவிட்டு, "வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழரு"டன் கச்சேரி நிறைவு பெற்றது.

இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை - ஊர், உலகம், உற்றார், பெற்றார் எல்லாவற்றையும் மறந்து - பாரதியாரின் இனிமையில் மூழ்கி அள்ளூறி ஆனந்தப்பட்டோம் - ஒரு தெய்வீகப் பொழுது.

பிகு: 1947 ஆகஸ்டு 15ஆம் தேதி இரவு 12 மணிக்கு, நமக்கு சுதந்திரம் கிடைத்தவுடன், ஆல் இண்டியா ரேடியோவில் முதல் முதலில் ஒலித்த பாடல் எது தெரியுமா? " ஆடுவோமே பள்ளு பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ...." நித்யஸ்ரீயின் பாட்டி ஸ்ரீமதி DK பட்டம்மாள் அவர்கள் இனிய குரலில்!

ராஜப்பா
9-10 PM on 12 Dec 2008

Comments

You have brought Bharathiyaar in front of my eyes. SV Subbaiah comes to my mind when I think of Bharathiyaar. The flowing narrative made me feel as if i spent the evening listening to all epic songs. "Chinna Chiru kiliye Kannamma pesum porchithirame", "Un Kannil Neer Vazhindhal en nenjil udiram kottudhadi" are some of my favourites though all Bharathiyaar songs are too good for me to comment. Can I take the liberty in naming you as "Sujatha" of GRS for the style of narration and for minute details.
Now I remember how I entered into your "gruhappravEsam" post. It is through this BhArathi post. I am a diehard fan of Bharathi. I am sure you enjoyed the experience with the mahAkavi through that kutcheri of Nityasri.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011