Skip to main content

The ONE and ONLY SUJATHA

கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா

சுஜாதாவின் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதே, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நல்நோக்கில் இதோ ....

கடவுள்களின் பள்ளத்தாக்கு.

"திவ்ய தேச க்ஷேத்ர தீர்த்த யாத்திரை செய்யக் குதூகலமுள்ள பக்தர்களுக்கு, அவை சம்பந்தமான சகல விவரங்களையும் தெரிவிப்பதற்கான பத்ரி யாத்திரை விளக்கு"

- மேற்கண்ட தலைப்பின் கீழ் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் 40 வருஷங்களுக்கு முன் ஒரு சுவாரஸ்யமான புத்தகம் எழுதியிருக்கிறார். அவர் போனபோது யாத்திரையில் உள்ள கஷ்ட-சுகங்களையும், தபால் ஆபீஸ் விவரங்கள் உட்பட்ட காட்சிகளையும் சம்ஸ்கிருதமும் தமிழும் மயங்கிக் கலந்த ஒரு வசீகர வசன நடையில் விவரித்திருக்கிறார்.

8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கையாழ்வார் தன் பாசுரத்தில்...
"முதுகு பற்றிக் கைத் தலத்தால்
முன்னொரு கோல் ஊன்றி,
விதிர்விதிர்த்துக் கண் சுழன்று
மேற்கிளை கொண்டிருமி,
இது வென் அப்பர் முத்தவா றென்று
இளையவர் ஏசா முன்,
மது உண் வண்டு
பண்கள் பாடும் வதரி வணங்குதுமே'"

என்று முதுகில் ஒரு கை வைத்துக் குச்சி ஊன்றி இருமிக்கொண்டு, மேல் மூச்சு வாங்கிக்கொண்டு - சின்னப் பையன்கள் "தாத்தா போறார் பாரு" என்று கேலி பண்ணுவதற்கு முன்னமே பத்ரி போய் சேவித்து விடுவோம் என்று வற்புறுத்தியுள்ளார். எனவே, பத்ரி நாராயணனை வணங்கப் பயணப்படத் தீர்மானித்து விட்டேன்.

முதலில், ஆக்ஸ்போர்டு அட்லாஸ் ஒன்று வாங்கிப் பார்த்தால், பத்ரி, உத்தரப்பிரதேசத்தில் இந்தியாவின் உச்சந்தலையில் திபெத், சைனா எல்லைகளின் அருகில் இருக்கிறது. இருந்தும், அதற்குப் போகிற வழிகள், பயண ஏற்பாடுகள் எல்லாம் மிகச் சுலபம். காசு வேண்டும்; அவ்வளவுதான். டெல்லிக்குப் போய்ப் பணத்தைக் கொடுக்க ஒப்புக் கொண்டவுடன், பணிக்கர் ட்ராவல்ஸ் 15-வது நிமிஷத்தில் காரை டெல்லி ஏஷியாட் கெஸ்ட் அவுஸூக்கு அனுப்பி விட்டார்கள். பஸ்ஸிலும் போகலாம்.

நான் 20 வருஷங்களுக்கு முன் டெல்லியில் இருந்தபோது கற்றுக் கொண்ட இந்தியைச் சற்றே தூசு தட்டி, டிரைவர் பேர் கேட்டேன். "நாராயண் சிங்" என்றான் அந்த இளைஞன்.

"ஆகா... பேரே என்ன சகுனமாக இருக்கிறது! பகவான் நாராயணனே நமக்குச் சாரதி ரூபத்தில் வந்துவிட்டான். இனிமேல் நமக்கு என்ன பயம்!" என்று நிம்மதியாக காரில் ஏறிக் கொண்டோம் (நான், மனைவி, மாமனார், மாமியார்).

நம்பிக்கை தப்பு! நாராயண் சிங் எடுத்த எடுப்பிலேயே ரூர்க்கி போகும் ரஸ்தாவில் 100 கிலோமீட்டரைத் தொட்டான். மலைப்பாதைகளில் சரேல் சரேல் என்று தெலுங்குப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி போல் ஓட்டினான். வாயால் பால் பாயின்ட்டைக் கவ்விக் கொண்டு, இரண்டு கைகளையும் பயன்படுத்தி கார் காஸெட்டை மாற்றி, இமாசலி பாஷையில் நாட்டுப் பாடல்களைக் கேட்டதும் இன்னும் உற்சாகமாகி, மாண்டிகார்லோ போல கொண்டை ஊசிகளைச் சாப்பிட்டான். அனைவருக்கும் வயிற்றில் பயம் பிரவாகிக்க, ''நாராயண் சிங்... தேக்கோ! பத்ரி போனால் மோட்சம் கிடைக்கும் என்றாலும், இத்தனை சீக்கிரத்தில் போக விரும்பவில்லை'' என்று அவனிடம் சொல்ல விழைந்து, நான் பேசிய இந்தி போதாததால் (குளிர்)... சும்மா நகங்களை ருசித்துக் கொண்டு, முழங்கால்களை ஒட்ட வைத்துக்கொண்டு, பகவான் நாராயணன் மேலும், அம்பாஸடரின் சஸ்பென்ஷன் மேலும் நம்பிக்கை வைத்துச் சென்றோம்.

நாங்கள் போன பகுதி உத்தரப் பிரதேசத்தின் கடுவால் ஜில்லாவின் மலைப் பிரதேசம். இமாலய மலைப் பர்வதங்களின் பக்கவாட்டில் கீறி கோடு போட்டாற்போல பார்டர் ரோடு இலாகா சாமர்த்தியமாக அமைத்த பாதை. ஒரு மலையில் ஏறி இறங்கி, ஒரு பெய்லி பாலத்தைக் கடந்து, அடுத்த மலையில் ஏறி மறுபடி இறங்கிச் செல்லும்போது, கூடவே அலகாநந்தா நதி பிடிவாதமாகத் தொடர்கிறது. சில வேளை சிமென்ட் பச்சையில், சில வேளை வெண்மையாக, சில வேளை அகலமாக அருகிலேயே, சில வேளை நரைமுடிபோல் மெல்லிசாகத் தெரியும் ஆழத்தில்! அநேக உற்சாகத்துடன் கற்களை உருட்டிக் கொண்டு இங்கேயும் அங்கேயும் நீரருவிகள் சுதந்திரம் எடுத்துக்கொண்டு, சாலையின் குறுக்கே உற்சாகமாகச் செல்ல... எந்தச் சமயத்திலும் கல் குன்றோ மலைச்சரிவோ எதிர் லாரியோ வரக்கூடிய... உடல் பூரா அட்ரினலின் பிரவகிக்கும் பயணம். ஆழ்வார் சொன்னது சத்தியமே! இளைய வயதிலேயே செல்ல வேண்டிய பயணம். இந்த ரோடுகளைத் தினம் தினம் இயற்கையோடு போராடித் திறந்து வைத்திருப்பதே பெரிய சாதனைதான்!

நாராயண் சிங் உற்சாகமாக, அங்கங்கே இந்தப் பாதையில் விழுந்து நொறுங்கிய பஸ்களையும் அலகா நந்தாவில் அடித்துக் கொண்டு போன உடல்களையும் பற்றி விவரித்து... குளிர் போதாது என்று உபரியாக நடுங்க வைத்துக்கொண்டிருந்தான். புல்டோஸர்களும், டீசல் நாகரிகமும், எஸ்.டீ.டி-யும், ஸாட்டிலைட்டும் உள்ள இந்தக் காலத்திலேயே இத்தனை கஷ்டப்படும்போது, ஆதிசங்கரர் இங்கே வந்து இந்தக் கோயிலை ஸ்தாபித்திருக்கிறார்; திருமங்கையாழ்வார் - தேவப்ரயாகை, ஜோஷிமட், பத்ரி மூன்று இடங்களுக்கும் வந்து பாடியிருக்கிறார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

பத்ரிகாசிரமத்துக்குப் போகும் வழி உங்களுக்கெல்லாம் தெரியும். டெல்லி போய் அங்கிருந்து ஹரித்வார், ரிஷி கேசம், தேவப்ரயாக், கர்ணப்ரயாக், நந்தப்ரயாக், ருத்ரப்ரயாக், விஷ்ணுப்ரயாக் என்று அங்கங்கே அலகாநந்தா வில் பாகீரதி, மந்தாகினி போன்ற நதிகள் வந்து கலக்கும். சுமார் அரை டஜன் ப்ரயாகைகளைக் கடந்து ஸ்ரீநகர் (காஷ்மீரத்தது அல்ல). அதன்பின் பீப்பல்கோட்டி, ஜோஷிமட், பத்ரிகாசிரமம். 'கடவுள்களின் பள்ளத்தாக்கு' என்று சொல்லப்படும் சுந்தரச் சரிவு. வீழ்ச்சி. உயரம் 10,350 அடி. பாதை ஹரித்வாரிலிருந்து 333 கி.மீ.

பத்ரிக்குச் செல்ல விரும்புவர்கள் வீட்டில் உள்ள அத்தனைக் கம்பளி சமாசாரங்களையும் கொண்டு செல்லவும். (பயங்கரமாகக் குளிரும்). ஊறுகாய் (சப்பாத்தி சாப்பிட்டு நாக்கு செத்துப் போகும்). ஃப்ளாஸ்க் (வெந்நீர், டீ போன்ற சமாசாரங்களுக்கு). டார்ச் லைட் (உத்தரப் பிரதேசம் முழுவதும் வோல்டேஜ் குறைவு அல்லது பவர்கட்). உங்களிடம் இருக்கும் பழைய சட்டைகள் (ஏழைகளுக்குக் கொடுக்க. விவரம் பின்னால்). செம்பு (தலையில் மொண்டு குளிக்க. நதியில் இறங்கமுடியாது. குளிரில் சுருங்கிப் போய் முற்றுப்புள்ளியாகிவிடுவீர்கள்). முதலுதவி, ரத்தக்காயம் முதலானவற்றுக்கு மருந்து மாயங்கள், சகல உபாதைகளுக்கும் மாத்திரைகள். டைகர்பாம், அமிர்தாஞ்சன். மூச்சு முட்டினால் மார்பைத் தேய்த்து விட மனைவி.

உத்தரப்பிரதேசத்தில் மிக ஏழ்மையான பகுதி இந்த கடுவால் ஜில்லா. பெண்கள் மூன்று வயதிலிருந்தே கடுமையாக உழைக்கிறார்கள். ஆண்கள் இத்தனைக் குளிரிலும் காலில் செருப்பில்லாமல் பாத்திரம் கழுவுகிறார்கள். அதிகாலையில் வெந்நீர் போட்டுத் தருகிறார்கள். எங்கே நின்றாலும், அங்கே மிக அழகான குழந்தைகளைப் பார்க்கலாம்... பிச்சை கேட்பதை!

கடுவால் பிரதேசத்துக் குழந்தைகளின் கன்னங்களில் மட்டும் ஆப்பிள் தெரிய, நான்கு வயதுச் சிறுமியின் முதுகில் தூளி போட்டு அதன் தங்கையோ, தம்பியோ எட்டிப்பார்க்க... குழந்தைகள் இருவரும் கைநீட்டி, ''சேட் பைசா தே! மாஜி பைசா தே!'' என்கிறார்கள். அம்மா, அப்பா என்ற வார்த்தைகளுக்கு முன்னமேயே 'பைசா தே' கற்றுக் கொடுக்கப்பட்டு, பைசா என்பதன் அர்த்தமோ, பிச்சை என்பதன் கொடுமையோ தெரியாத அறியாமையிலேயே பிச்சையெடுக்கத் துவங்கி விட்ட கடவுள் துண்டங்கள்! இத்தனை வருஷம் ஆகியும் ஆதார ஏழ்மையை ஒழிக்க முடிய வில்லையே... எங்கே தப்பு? ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்துவிடலாமா? எல்லாக் குழந்தைகளும் விதிவிலக்கின்றி கந்தலாக, மிகக் கந்தலாக உடுத்திக்கொண்டு பிச்சை எடுக்கும் காட்சி உள்ளத்தை உருக்குகிறது. ஆகவேதான் பத்ரிக்குச் செல்லும்போது, பீரோ பீரோவாகக் குவித்து வைத்திருக்கும் பழைய துணிகளை எடுத்துச் சென்று அவர்களுக்குக் கொடுங்கள். பத்ரி நாராயணன் மிகவும் சந்தோஷப்படுவார்.

'பத்ரி' என்றால் இலந்தை மரமாம். இலந்தை மரத்தின் கீழ் நர நாராயணன் ஆயிரமாயிரம் வருஷங்களாக மோனத்தவத்தில் இருந்ததாகவும், பிற்காலத்தில் நர நாராயணன்... அர்ஜுனன் கிருஷ்ணனாக அவதரித்ததாகவும் அவர் தவமிருந்து ஏறக்குறைய கொன்று விட்ட ராட்சஸன் கர்ணனாகப் பிறந்ததாகவும் பலவிதமான கதைகள் சொல்கிறார்கள்.

கொஞ்சம் சரித்திர உண்மைகள்... இந்தக் கோயில் 8-ம் நூற்றாண்டிலிருந்து பௌத்த ஆதிக்கத்தில் இருந்தது. ஆதிசங்கரரால் வைணவத் தலமாக மாற்றப்பட்டு, இங்கே ஒரு பீடம் அமைத்தது (தாமம் என்று சொல்கிறார்கள்). உண்மைதான். இல்லாவிட்டால் கேரளத்து நம்பூதிரிகள் இங்கே பூஜை செய்வதை விளக்கவே முடியாது. திருமங்கைமன்னன் 20 பாட்டுக்கள் பாடியிருக்கிறார். ஜோஷிமட்தான் இவர் பாடிய 'பிரதி' என்கிறார்கள். பெரியாழ்வார் 'கண்டம் கடினகர்' என்று, அலகாநந்தா முடிந்து கங்கை ஆரம்பிக்கும் தேவப்ரயாகையைப் பாடியிருக்கிறார். பத்ரி, 1937 வரை நம்பூதிரிகளின் ராஜ்யமாக இருந்து பிரிட்டிஷாரால் உத்தரப்பிரதேசம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

மலையடிவாரத்தில் சிவப்பும் தங்கமுமாக இத்தனை பிரயாசைக்குப் பின் சற்றே ஏமாற்றம் தரும், சற்றே குருத்வாராவை நினைவுபடுத்தும் அமைப்புள்ள சிவன் கோயில். விக்கிரகங்கள் குபேரன், கருடன், லக்ஷ்மி, நாரதர், வீற்றிருந்த திருக்கோலத்தில் இரண்டு திருக்கரங்களுடன் நாராயணன். (புத்தர்?) வருஷம் பூராவும் வெந்நீர் சொரியும் தப்த குண்டம். அதில் உற்சாகமாகக் குளிக்கும் சர்தார்ஜிகள் (ஆம், அவர்களும் வருகிறார்கள்). 21 தலைமுறை முன்னோர்களுக்கும் பிண்டப்ர தானம் செய்ய அலகாநந்தாவின் கரையில் கோட்டு போட்டுக் கொண்டு மந்திரம் சொல்லும் பண்டாக்கள். தெலுங்கும் கன்னடமும் பெங்காலியும் இந்தியும் பஞ்சாபியும் ஒலிக்கும் ஒரு மினி இந்தியாவின் பக்தர் கூட்டம்.

வழக்கம்போல இச்சிலி பிச்சிலி சாமான்கள் விற்கும் கடைகள், இட்லி தோசை கிடைக்கும் தென்னிந்திய ஓட்டல்கள். என்ன... இட்லி கொஞ்சம் கல்லாக இருக்கும். அடிக்கு அடி சாமியார்கள், யோகிகள்...

இந்து மதத்தின் அத்தனை விசித்திரங்களும் பளிச்சிடும் பத்ரி எல்லையை அடைந்தவுடன் எனக்கு ஏற்பட்ட முதல் உணர்ச்சி, காப்பாற்றப்பட்டோம்... தப்பித்தோம் என்பது தான்! மானுடர்களாகிய நாம் எத்தனைச் சிறியவர்கள், அற்பமானவர்கள் என்பதை வானளாவிய பனித்தொப்பி போட்ட மலையுச்சிகளை நோக்கும்போது, இயற்கையின் மௌனமான கோபத்துடன் உணர முடிகிறது.

நன்றி: ஆ.விகடன் 26-11-2008

என்ன ஒரு நடை! படிப்பவர்களை அப்படியே கட்டிப்போடும் ஒரு வசீகர எழுத்து. பயணக்கட்டுரையையும் சுவாரசியமாக எழுதமுடியும் என்பதற்கு ஒரு இனிய சான்று. நகைச்சுவையை (மார்பு தேய்த்துவிட மனைவி) ரசித்துக் கொண்டிருக்கும்போதே, கடுவால் ஆப்பிள் குழந்தைகளைப் பற்றி எழுதி கண்களை குளமாக்கும் அபூர்வ மனிதர். Oh Sujatha, you are great. The one and only SUJATHA.

rajappa
2:10PM on 8 Dec 2008

Comments

I read it thrice. Such a beautiful flow like Ganges. On any topic he was Master.Thanks for bringing it out to all.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011