அயோத்யா காண்டம். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினமும் காலை 6-30 முதல் 6-45 வரை ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உபன்யாஸம் பண்ணி வருவது தெரிந்ததே. இன்று (10-12-2012) 179வது உபன்யாஸம் செய்தார்; அயோத்யா காண்டம் - ஸ்ரீ ராமபிரான் காட்டிற்கு போகும் படலம்/ இந்த காண்டத்தில் ஸ்ரீ ராமனின் பட்டாபிஷேக ஏற்பாடுகளை விவரிக்கிறது. பின்னர் மந்தரையின் வார்த்தைகளை கேட்டு மயங்கிய கைகேயி அரசன் தஸரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்கிறாள். தன் மகன் பரதன் நாடு ஆள வேண்டும், ராமன் 14 வருஷங்களுக்கு காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே அந்த இரண்டு வரங்கள். முதலில் மறுத்த அரசன் பின்னர் ஒத்துக் கொண்டு மூர்ச்சையாகி விடுகிறான். ராமனை அழைத்து இந்த வரங்களைப் பற்றி தெரிவிக்கிறாள். எந்த வித வாட்டமும் இல்லாமல் ராமன் காடு செல்ல ஏற்றுக் கொண்டு தன் தாய் கௌஸல்யாவிடம், தம்பி லக்ஷ்மணன், மனைவி ஸீதாவென எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு காடு செல்ல தயாராகி விட்டான். இனி விவரமாக, செய்தியைக் கேட்டதும் கௌஸல்யா மூர்ச்சையாகி கீழே விழுகிறாள்; மூர்ச்சை தெளிந்ததும் சோகமாகி விடுகிறாள் (2:20) லக்ஷ்மணன் மிக கோபமாக பேச ஆரம்பிக்கிறான்...