நேற்று (15-12-2009) மாலை 3-45 மணி சுமாருக்கு திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது. மழை என்றால் அப்படி ஒரு மழை. விஷாகா ஹரியின் கதாகாலட்சேபத்திற்கு எப்படி போவது? மழை கொஞ்சம் விட்டதும், ஒரு ஆட்டோ பிடித்து, நானும் விஜயாவும் MRC நகரிலுள்ள குமாரராஜா முத்தையா செட்டியார் அரங்கத்திற்கு சென்றோம். மழையினால் கூட்டம் கொஞ்சம் குறையும் என எண்ணினோம். 6-30க்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சிக்கு 5 மணிக்கு நுழைந்தால் .. அரங்கம் நிரம்பி வழிந்தது!! 6-30க்கு the hall was packed! வழக்கம்போல சிரித்த முகத்துடன் ஸ்ரீமதி விஷாகா ஹரி தன் கதா காலட்சேபத்தை ஆரம்பித்தார்; சுதாமா என்கிற குசேலரைப் பற்றிய கதை – குழந்தைக்கும் தெரிந்த கதை. “சேல” என்றால் வஸ்திரம், ஆடை; “கு_சேல” என்றால் கிழிந்த வஸ்திரம், கிழிந்த ஆடை. சுதாமா மிகவும் வறியவர், அவரது ஆடைகள் எப்போதும் கிழிந்தே காணப்படும் என்பதால், அவர் “குசேலர்” என அழைக்கப்பட்டார். சுதாமாவும், ஸ்ரீகிருஷ்ணனும் சிறுவயதில் ஒன்றாகப் படித்தவர்கள், சிறந்த நண்பர்கள். பிற்காலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் த்வாரகாவின் மஹாராஜாவாக ஆனார்; சுதாமாபுரி (தற்போதைய போர்பந்தர்)என்னும் ஊரில் சுதாமா தன் மனைவி, குழந்த...