ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள்.
திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள வேதவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள் எனக்கு மிகவும் பிடித்த பகவான்.
நேற்று (9-9-2012) ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு இந்தக் கோயிலுக்கு போகவேண்டும் என்ற ஆசை திடீரென எனக்குள் எழுந்தது. விஜயாவும் நானும் 4-15க்கு கிளம்பி விட்டோம். திருவான்மியூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஏதோ ஒரு பஸ்ஸை பிடித்து திருவான்மியூர் ரயில் நிலையம் சென்று, ஏறி, இறங்கி 5-15 மணி ரயிலை பிடித்தோம். 5.00 டிக்கெட். [மந்தைவெளி போக பஸ்ஸில் கட்டணம் என்ன தெரியுமா? ரூ 11.00]
5.30 சுமாருக்கு திருவல்லிக்கேணி ஸ்டேஷனில் இறங்கி, கண்ணகி சிலை தாண்டி, PYCROFTS ROADல் [பாரதி சாலை] திரும்பி, ஆட்டோ பிடித்து, ஸ்ரீ பார்த்தஸாரதி கோயிலுக்கு சென்றோம். என்ன ஒரு தெய்வீகமான சூழ்நிலை! கோயிலில் நிறையக் கூட்டம் இல்லை. 10 நிமிஷங்கள் க்யூவில் நின்ற பிறகு பெருமாளின் தரிஸனம் கிடைத்தது. நம் அருகில் வந்து நின்று காதில் கீதோபதேசம் சொல்வதாக எண்ணம் வருகிறது.
கிட்ட நின்று, கீதாசாரியனை, ”பிதா அஹம் அஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ” என்று உலகத்திற்கே தந்தை, தாயான அந்த பரமாசாரியனை வணங்கி வேண்டிக் கொண்டு, ஸ்ரீ வேதவல்லித் தாயாரையும் நமஸ்கரித்துக் கொண்டு, ஆண்டாள், யோக நரஸிம்ஹர் போன்றோரையும் வணங்கினோம்.
பார்த்தசாரதிக்கு முத்துக்களால் அலங்கரிக்கும் முத்தங்கி ஸேவை சார்த்தியிருந்தார்கள் - கண்கொள்ளா காக்ஷி, என்ன அழகு! சன்னதிக்கு அருகில் ராமரும் ஸீதம்மாவும் பட்டாபிஷேகக் கோலத்தில் திவ்ய தரிஸனம் தருகிறார்கள்.
இதற்கு முன்பு ஜூன் 2011, அக்டோபர் 2009, மே 2008 என இந்தக் கோயிலுக்கு போயிருக்கிறோம். இதே வலைப்பதிவில் படிக்கலாம்.
ராஜப்பா
காலை 11 மணி
10-09-2012
Comments