பகவான் ஸ்ரீகண்ணன் அருளிய ஸ்ரீமத் பகவத் கீதையில் 17-வது அத்தியாயமான சிரத்தாத்ரய விபாக யோகத்தில் பகவான் மூன்றுவித சிரத்தைகளைப் பற்றி விவரிக்கிறார். தேகம் எடுத்தவர்களுக்கு இயல்பாக உண்டான சிரத்தையானது சாத்விகமென்றும், இராஜஸமென்றும், தாமஸமென்றும் மூன்று விதமாயிருக்கிறது. எந்தெந்த ஆகாரங்களினால் இந்த மூன்று வகை சிரத்தை உண்டாகும் என விவரித்தவர், மேலும் கூறுகிறார்:
ஆராதனையாகச் செய்தே ஆகவேண்டுமென்று மனதை உறுதிப்படுத்திக் கொண்டு, வினைப்பயனை விரும்பாதவர்களால் சாஸ்திர விதிப்படி எந்த யாகம் செய்யப்படுகிறதோ அது சாத்விகமானது.
பயனை விரும்பியோ, ஆடம்பரத்துக்காகவோ செய்யப்படுகிற ஆராதனைகள் ராஜஸமானது என்கிறார்.
வேதநெறி வழுவியதும், அன்னதானமில்லாததும், மந்திரமற்றதும், தக்ஷிணையில்லாததும், சிரத்தையற்றதுமாகிய யக்ஞம் தாமஸிகம் என சொல்லப்படுகிறது.
மனிதன் சிரத்தையோடு எதை பூஜிக்கிறானோ அவன் அதுவாகிறான். அதற்குத் தவம் பெருந்துணையாகிறது. தவம் யாது? விளக்குகிறார் பகவான்.
தவத்தின் மூலம் மனிதன் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறான். மெய் (உடல்), மொழி, மனம் ஆகிய மூன்று கரணங்களையும் கொண்டவன் மனிதன். இம்மூன்று கரணங்களையும் புதுப்பிப்பது தவம். அதன் விவரம் ::-
தேவர், பிராம்மணர், குருமார், ஞானிகள் ஆகிய இவர்களை பூஜிப்பதும், போற்றுவதும், தூய்மையும், நேர்மையும், பிரம்மசரியமும், அஹிம்ஸையும், தேகத்தால் செய்யும் தவம் எனப்படுகிறது.
தேவத்விஜ குருப்ராக்ஞ பூஜனம் சௌசம் ஆர்ஜவம் |
ப்ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச சாரீரம் தப உச்யதே || 17:14
த்விஜ = ப்ராம்மணர்கள்
ப்ராக்ஞ = ஞானிகள்
பூஜனம் = பூஜிப்பது, போற்றுவது
சௌசம் = உடல் தூய்மை
ஆர்ஜவம் = நேர்மை
பரப்ப்ரம்மத்தின் பல்வேறு தோற்றங்கள் தேவர்கள் எனப்படுகின்றனர். பாரமார்த்திக வாழ்க்கையில் புதிய பிறவியெடுத்தவர்கள் ப்ராம்மணர்கள். நல்வாழ்க்கையில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள் குருமார்கள். மெய்ப்பொருளை அறிந்தவர்கள் ஞானிகள். நீராடி உடலை தூயதாய் வைத்திருக்க வேண்டும்.
அடுத்து, வாக்கு மயமான தபசு.
அனுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் |
ஸ்வாத்யாய அப்யஸனம் ச ஏவ வாங் மயம் தப உச்யதே ||
17: 15
அனுத்வேககரம் = பிறரை துன்புறுத்தாதது, அடித்து துன்புறுத்துவதை விட கடுஞ்சொல் சொல்லி துன்புறுத்துவது கூடாது
வாக்யம் ஸத்யம் = எப்போதும் ஸத்யம் (வாய்மை) பேசுவது
ப்ரியஹிதம் = இனிமையாக பேசுதல், பழகுதல்
ஸ்வாத்யாய அப்யஸனம் = வேதங்கள் ஓதுதல், அருள் மொழிகளை, சாஸ்திரங்களை வாய்விட்டு ஓதுதல், படித்தல்.
துன்புறுத்தாத வாய்மையும், இனிமையும், நலனும் கூடிய வார்த்தை, மற்றும் வேதம் ஓதுதல் - இது வாக்கு மயமான தபசு எனப்படுகிறது.
மூன்றாவது மானஸ தபசு அதாவது மனசினால் செய்யப்படும் தபசு பற்றி பகவான் கூறுகிறார்.
மன: ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌனம் ஆத்மவிநிக்ரஹ |
பாவ ஸம்சுத்தி: இதி ஏதத் தபோ மானஸமுச்யதே || 17:16
மன: ப்ரஸாத = மன அமைதி, சோர்வடையாது, குழப்பமில்லாது அமைதியாக இருத்தலே மன பிரசாதமாம்.
ஸௌம்யத்வம் = அன்புடமை
மௌனம் = சீரிய எண்ணங்களே உள்ளத்தில் உதிக்க இடந்தருதலும், கெட்ட எண்ணங்களை வர ஒட்டாமல் தடுத்தலும், ஈசுவர சிந்தனை தைலதாரை போன்று ஊற்றெடுப்பதும் மௌனம் எனப்படும்.
ஆத்ம விநிக்ரஹம் = தன்னடக்கம். சொல்லிலும், செயலிலும் விடச் சிந்தனையில் தன்னடக்கம் பயிலுதல் சாலச்சிறந்தது. சிந்தனையில் அடக்கம் பழகியவனுக்கு வாயடக்கமும் மெய்யடக்கமும் தாமே வந்து அமையும்.
பாவ ஸம்சுத்திர் = தூய நோக்கம், எப்போதும் உணர்ச்சி தூயதாக இருக்க வேண்டும்.
தபோ மானஸம் உச்யதே = மானஸ தபசு என்று சொல்லப்படுகிறது.
இந்த மூன்று அறிவுரைகளும் அர்ஜுனனுக்கு மட்டுமல்ல - நம் எல்லாருக்கும், ஒவ்வொருத்தருக்கும் - ஸ்ரீகிருஷ்ண பகவான் அருளியது. அவரது சொற்படி தினம் தினம் நடக்க பயிலுவோமாக.
ராஜப்பா
5:00 மணி மாலை
7-9-2012
Comments