வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் ராமாயண உபன்யாஸம் சென்ற 31 மார்ச் 2012 முதலாக சொல்லி வருகிறார். (பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30 மணிக்கு). இதைப் பற்றி நான் எழுதியதை இங்கு படிக்கலாம்.
ராமாயணம் மொத்தம் 6 காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பால காண்டம் என்பது முதல் காண்டம். இதில் 77 ஸர்கங்கள் உள்ளன.
அயோத்யா மஹாராஜனான தசரதனுக்கு ராமர், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் என 4 பிள்ளைகள் பிறந்தது முதல், அந்த நால்வருக்கும் மிதிலையில் திருமணம் முடியும் வரை பால காண்டம் சொல்லுகிறது.
ப்ரஹ்மரிஷி விஸ்வாமித்திரரின் யாகத்தை ராமர் காத்தது, ராக்ஷசி தாடகையை அழித்தது, பின்னர் அவரும், தம்பி லக்ஷ்மணனும் விஸ்வாமித்திரருடன் மிதிலா நகரம் நோக்கி சென்றது, நடுவில் கௌஸிக முனிவரின் பத்னியாகிய அகல்யாவிற்கு சாப விமோசனம் அளித்தது, மிதிலா ராஜ்யத்தின் அரசனான ஜனக மஹாராஜாவின் சிவதனுஸை முறித்தது, பின்பு ஜனகனின் புத்ரியாகிய ஸீதாவை ராமர் கல்யாணம் செய்து கொண்டது, பரசுராமரின் கர்வத்தை அடக்கியது போன்றவை பால காண்டத்தில் முக்கியமாக விளக்கப்படுகின்றன.
ஸீதா கல்யாணத்தை பஜனை ஸம்ப்ரதாயத்தில் பஜனை மூலமாக 5 நாட்கள் விளக்கினார். நன்றாக இருந்தது. சென்ற 2011-ல் நாங்கள் கவரப்பட்டு கிராமத்தில் இதுபோன்ற (பஜனை ஸம்ப்ரதாயம்) ஸீதா கல்யாணம் நேரில் பார்த்ததினால், இது இன்னும் ருசியாக இருந்தது.
லக்ஷ்மணனுக்கு ஊர்மிளையையும் (ஜனகரின் இரண்டாவது புத்ரி), ஜனகரின் தம்பியான குஷத்வஜாவின் புத்ரிகளான மாண்டவியை பரதனும், ஷ்ருதகீர்த்தியை சத்ருக்னனும் அதே முஹூர்த்தத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டனர்.
ஸ்ரீவால்மீகி பகவான், ஸீதா கல்யாணத்தை ஒரே ஒரு ஸ்லோகத்தில் முடித்து விட்டார். அந்த ஸ்லோகம் மிகவும் அருமையானது; மிக ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கியது.
“ இயம் ஸீதா மம சுதா சஹதர்ம கரீசி தவ |
ப்ரதிச்ச ச ஏனம் பத்ரம் தே பாணீன க்ருஹநீஷ்வ பாவீனா ||
[1.73.26]
இயம் = இது, this
மம = என்னுடைய, mine
தவ = உன்னுடைய, yours
என்ற மூன்று வார்த்தைகளும் மிக ஆழமான அர்த்தங்கள் கொண்டவை.
இயம் ஸீதா = இது ஸீதா (வேறு யாரோ என்று எண்ணி விடாதே)
மம சுதா (Mama Sutaa) = என்னுடைய பெண் (அழுத்தமாக ஜனகர் சொல்லுகிறார் - என்னுடைய பெண்.)
தவ = உன்னுடைய; சஹதர்ம = எல்லா தர்ம காரியங்களிலும்
கரீசி = உடன் இருப்பாள்.
என்ன ஒரு அர்த்தபுஷ்டியான அறிமுகம் !!
ஸீதையை ராமருக்கு ஜனகர் கன்யாதானம் பண்ணிக் கொடுக்கவில்லை. Siitaam Dadaami என்று சொல்லவில்லை. ஏன்? ஸீதாதான் மஹாலக்ஷ்மி. மஹாலக்ஷ்மியும் பகவானும் இந்நாள் வரை பிரிந்து இருந்தார்கள். இப்போது மீண்டும் சேரப் போகிறார்கள். அவள் பகவானின் சொத்து. மாதாவை இதுவரை ஜனகர் போற்றி பாதுகாத்து வளர்த்து வந்தார், பகவான் மீண்டும் வந்ததும் அவரிடமே அவர் சொத்தை திருப்பிக் கொடுக்கத்தான் இந்த திருமணமே. பகவானின் சொந்த பொருளை ஜனகர் எப்படி ”கன்யாதானம்” பண்ணிக் கொடுக்க முடியும்?
எனவே ஜனகர் கூறுகிறார் --- ப்ரதிச்ச ச ஏனம் - இவளை மீண்டும் மனப்பூர்வமாக எடுத்துக் கொள்; பத்ரம் தே = (இவள் உன்னுடன் இருக்கும்போது) நீ பத்திரமாக, பாதுகாப்பாக இருப்பாய். பாணீன க்ருஹநீஷ்வ பாவீனா - உன் கையால் இவளது கரத்தைப் பற்று. பாணிக்கிரஹணம்.
மீண்டும் ஸ்லோகத்தை படியுங்கள் :
“ இயம் ஸீதா மம சுதா சஹதர்ம கரீசி தவ |
ப்ரதிச்ச ச ஏனம் பத்ரம் தே பாணீன க்ருஹநீஷ்வ பாவீனா || [1.73.26]
”உபந்யாஸத்தை சொல்லும் நானும், கேட்கும் நீங்களும் நாம் எல்லாரும், ஸீதா கல்யாணம் முழுதும் பெண் வீட்டுக்காரர்களாகவே இருப்போம் !” என்று வேளுக்குடி சொல்லிவிட்டார். ஆக, நாங்கள் பெண் வீட்டுக்காரர்களாக இருந்து நம்முடைய ஸீதம்மாவிற்கு கல்யாணம் பண்ணி வைத்தோம்.
இன்றுடன் (28-09-2012) பாலகாண்டம் நிறைவு பெற்றது. திங்கட்கிழமை முதல் அயோத்யா காண்டம் ஆரம்பம். எதிர்பார்த்திருப்போம்.
ராஜப்பா
28-09-2012
11:45 காலை.
Comments
S.Sundaresan and S.Pattammal,Pune