சென்னை, செட்டிநாடு வித்யாஷ்ரம் ஸ்கூலில், குமாரராஜா முத்தையா ஹாலில் ஒவ்வொரு வருஷமும் JAYA TV நடத்தும் “மார்கழி மஹோத்ஸவம்” டிசம்பர் 1 ஆம் தேதி துவங்கி, 15 ஆம் தேதி முடிவடையும். ஒவ்வொரு வருஷமும் கடைசி நாளான டிச 15 ஸ்ரீமதி விஷாகா ஹரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பல வருஷங்களாக விஷாகாவின் கதா காலக்ஷேபத்துடன் இந்த விழா முற்றுப் பெறுகிறது. போன வருஷம் (டிச 2010) “ஸ்ரீகிருஷ்ண லீலா” நடந்தது. (படிக்க) ஸௌம்யா, அதிதி போன்ற குழந்தைகளுக்கு ராமாயணம் கதை சொல்லும்போது, “ஸ்ரீராமருக்கு பழம் கொடுத்தாள்,” என சபரியைப் பற்றி கூறுவேன்; அத்தோடு சபரியின் பங்கு முடிந்தது. நேற்று (15-12-2011) செட்டிநாடு வித்யாஷ்ரம் குமாரராஜா முத்தையா அரங்கில் உபன்யாஸம் செய்த ஸ்ரீமதி விஷாகா ஹரி அப்படி நினைக்கவில்லை; இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல், அவர் தனது இனிமையான குரலில் சபரியைப் பற்றி நாம் அறிந்திராத பல விஷயங்களை பாடல்கள், கதைகள் மூலம் சொன்னார். விஷாகாவின் நேற்றைய “ சபரி மோக்ஷம்” மிக அற்புதமாக, தெய்வீகமாக இருந்தது. சபரர் என்னும் ஆதிவாசி இனத்தில் மலைவாழ் பெண்ணாகப் பிறந்த சபரி, தன் தாயால் புறக்கணிக்கப்பட்டு, அநாதைய...